இந்திய ஜெய்ப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமியை, குற்றவாளியின் 8 வயது மகனுக்கே திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளித்த ஊர் பஞ்சாயத்தார் மற்றும் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது கேஷவ்புரா பகுதி. அப்பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே மணமான 40 வயது ஆண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால், நடந்த சம்பவம் பற்றி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊரார், பஞ்சாயத்தைக் கூட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளியின் 8 வயது மகனுக்கு திருமணம் செய்துவைத்து விடும்படி தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால், ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்பை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனராம். இதனை தனக்கு சாதமாகப் பயன் படுத்திக் கொண்ட குற்றவாளி மீண்டும் ஒருமுறை அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாயத்தாரின் தீர்ப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சிறுமியின் பெற்றோரை மகாவீர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க உதவி செய்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதும் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.