சீமானினுக்கு நாளை திருமணம்!!

457

seeman

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும் தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார் சீமான். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.



இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் சீமான். இந்த நோக்கத்துக்காகவே நாம் தமிழர் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் வேலூர் பொதுக் கூட்டத்தில் அதை அரசியல் கட்சியாகவும் மாற்றினார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ சீமானின் அனல் பறந்த பிரச்சாரமும் முக்கிய காரணம்.

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர். அங்கு செந்தமிழன்-அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் காளிமுத்து-மனோகரி தம்பதியின் மகள் கயல்விழியை நாளை திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

சீமான்-கயல்விழி திருமணம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர். திருமண விழாவில் அரசியல் பிரமுகர்களும் திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.