வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழியை உடைந்துவிடக்கூடாது : வவுனியா தேர்தல் பிரசாரத்தில் மனோ கணேசன்!!

581

mano

உலகம் தனது அவதான பட்டியலில் நமது இனத்தின் அரசியல் தீர்வு பிரச்சினைகளையும், உரிமை மீறல் பிரச்சினைகளையும் கணிசமான முன் இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் நாம் எச்சரிக்கையுடன் வாக்களித்து உலகத்துக்கு உரிய செய்தியை அனுப்ப வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் நேற்று வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

விதை விதைத்து அந்த விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனியாகி வரும் வேளையில் மரத்தை வெட்டி விட சிலர் முயல்கிறார்கள். இந்த வெட்டியான்களையிட்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெண்ணெய் திரண்டு வரும் நேரமிது. சிலர் கல்லெறிந்து தாழியை உடைக்க குறி பார்க்கிறார்கள். இந்த குறிகாரர்களையிட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



உலகம் தனது அவதான பட்டியலில் நமது இனத்தின் அரசியல் தீர்வு பிரச்சினைகளையும், உரிமை மீறல் பிரச்சினைகளையும் கணிசமான முன் இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் நாம் எச்சரிக்கையுடன் வாக்களித்து உலகத்துக்கு உரிய செய்தியை அனுப்ப வேண்டும்.

எனவே வெட்டியான்களின் வலையிலும், குறிகாரர்களின் ஜாலங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ விழுந்து விடாதீர்கள். வெண்ணெய் திரண்டுவரும் இந்த வேளையில் தாழி உடைபட நாமே காரணமாகிவிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

உலகத்தை நம்ப வேண்டாம் என்று சொல்லி வாழ்வோ, சாவோ நாம் உள்நாட்டிலேயே பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம். சொல்லி இன்று சிலர் நம்மை சர்வதேச சமூகத்திடம் இருந்து வெட்டி பிரிக்க முயல்கிறார்கள். நமது மக்கள் சாகும் போது ஐநா சபையும் சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்தன. ஆகவே உலகத்தை நம்ப கூடாது. என்ற வாதத்தை நான் ஏற்றுகொள்ள தயார் இல்லை.

உலகம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மைதான். அது எனக்கு தெரியும் அனால் உலகம் என்பது தமிழர் தரப்பு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது அவசரத்துக்கு அது செயல்படாது. அது தன் தேவைகளுக்கு ஏற்பவே நகரும். ஆகவே ஐநாவையும், இந்தியாவையும், அமெரிக்காவையும் புறக்கணித்து நாம் பயணிக்க முடியாது.

அதேபோல் நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உலகம் தங்க தட்டில் கொண்டு வந்து தரும். அதுவரை காத்திருங்கள் என்ற சோம்பேறிகளின் வாதத்தையும் நான் ஏற்றுகொள்ள தயார் இல்லை. நமது தீர்வுகளை தேடி தரும் முழு பொறுப்பை ஐநாவிடம் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் கையாலாகாத சோம்பேறி அரசியலில் எனக்கு வெறுப்பு இருகின்றது.

நாம் நமது பொறுப்பை நிறைவேற்றினால் உலகம் தனது கடமையை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும். நாம் செய்வதுதான் முதற்கடமை. உலகம் செய்வது துணை கடமை. இன்று நமக்கு முன்னால் உள்ளது தேர்தல் அல்ல. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெறுவது வெறும் தேர்தல் அல்ல. இது ஒரு மக்கள் ஆணைக்கான வாக்கெடுப்பு. 13ம் திருத்தமும் மாகாணசபையும் முழுமையான தீர்வு அல்ல என்பது நமக்கு தெரியும்.

ஆனால் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துவோம். இதை ஒரு வாக்கெடுப்பாக கருதி உலகத்துக்கும் அரசாங்கத்துக்கும் திடமான செய்திகளை அனுப்புவோம். உலகம் நகராது உள்நாட்டில் தான் பேசி பேசி தீர்வு காண வேண்டும் என்பவர்களுக்கு நவநீதம் பிள்ளை வந்து பதில் கூறி சென்றுவிட்டார். ஆனால் அத்துடன் விவகாரம் முடிவுக்கு வராது. நாம் இந்த தேர்தலில் தரும் முழுமையான ஆணை ஐநா சபையை அடுத்த கட்டத்துக்கு தள்ளும்.

மொத்தம் 38 ஆசனங்களில் 20 ஆசனங்கள் கிடைத்தாலும் வெற்றிதான். ஆனால் அது மக்கள் ஆணை இல்லை. 30க்கும் மேற்பட்ட ஆசனங்களை வழங்கி அமோக வெற்றியை வடக்கில் தந்தால்தான் அது மக்கள் ஆணையாக கருதப்படும்.

வட மாகாணத்தில் கூட்டமைப்பு போட்டியிடுவது ஆட்சி பொறுப்பை ஏற்க அல்ல என நான் நினைக்கின்றேன். ஆட்சி பொறுப்பு என்பது ஒரு துணை விளைவுதான். மக்கள் ஆணை என்பதுதான் முதல் விளைவு மற்றும் முதல் நோக்கம்.

உரிமை மீறல்கள் முதல் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு வரை பல கேள்விகளும், கோரிக்கைகளும் உங்கள் மனங்களில் உள்ளன. இவற்றுக்கான பதில்களை உலகம் பெற்று தர வேண்டும் என்றால் மக்கள் ஆணையை தரும் வண்ணம் அமோக வெற்றி தரும் வண்ணம் வாக்களிக்க வேண்டும்.

ஆகவே மீண்டும் சொல்கிறேன். உலகம் உதவாது என்ற மோசடிக்காரர்களின் கருத்தை நிராகரித்து உலக சமூகத்தை நம்புங்கள். அதேவேளை உலகம் கொண்டு வந்து தரும் நாம் சும்மா இருப்போம் என்று சொல்லும் சோம்பேறிகளையும் நிராகரியுங்கள். உலகம் செயல்பட வேண்டும். நாமும் செயல்பட வேண்டும்.

நமது செயல்பாடு என்பது வீடுகளில் உட்கார்ந்து உலகை அளப்பதும், அரசியல் தலைவர்களையெல்லாம் விமர்சித்து காலம் தள்ளுவது அல்ல. நமது செயல்பாடு வெளியே வந்து மக்கள் ஆணை என்று கருதப்படும் வண்ணம் வாக்களித்து, உலகை உற்சாகப்படுத்துவது ஆகும். வடக்கில் இதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இது நடக்காவிட்டால் என்னை இனிமேல் இங்கே வரும்படி அழைக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.