இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பை பலப்படுத்த 10 ஆயிரம் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாவோயிஸ்ட் அமைப்புள்ள சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட்,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மாவோயிஸ்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
எனினும் 10 முதல் 15 வயது வரை உள்ள 4 ஆயிரம் சிறுவர், சிறுமிகளுக்கு துப்பாக்கி சுடவும், ஆயுதங்களை கையாளவும் மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு பயிற்சி அளிப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை கண்காணிக்கவும் சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சத்தீஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில், மாவோயிஸ்டுகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு ஐநா அறிக்கை தகவல் வெளியிட்டது.
இதுபோன்று எவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது
அதே நேரத்தில் கடந்த ஆண்டு குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர்களை மாவோயிஸ்டுகளும் சல்வா ஜுடும் அமைப்பும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்,சிறுமியர்களின் உரிமையைப் பாதுகாக்கும் திட்டம் ஆந்திரப்பிரதேசம்,அஸ்ஸாம், சத்தீஸ்கர்,பீகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.