எதிரும் புதிருமானவர்கள் என்று கோலிவூட்டினரால் வர்ணிக்கப்படுபவர்கள் பட்டியலில் சிம்பு -தனுஷ், நயன்தாரா – த்ரிஷா 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். மற்ற 3 பேர்களுடனான உறவு குறித்து த்ரிஷா கூறியது..
தனுஷ் உடன் கொடி படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். தன்னலமில்லாதவர் தனுஷ். எனது கதாபாத்திரத்தை அவர் மிகவும் விரும்பியதுடன் தான் ஏற்றிருக்கும் இரட்டை ரோல் மீது கவனத்தை திருப்பாமல் நீங்கள் (த்ரிஷா) ஏற்கும் கதாபாத்திரம் மீது மட்டும் மிக கவனமாக இருங்கள் என்று என்னிடம் கூறியிருந்தார்.
படம் மட்டுமல்லாமல் படத்தில் எங்கள் இருவரின் ஜோடியையும் எல்லோருக்கும் பிடிக்கும். சிம்புவை பொறுத்தவரை இன்றுவரை எனது நெருங்கிய நண்பராக இருக்கிறார். ‘அலை’ படம் முதலே எங்கள் நட்பு தொடர்கிறது.
எங்கள் இருவருக்கும் சினிமாவை தவிர்த்து நிறைய பொது நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் ரொம்பவும் ஜாலியானவர் என்பது மற்றவர்களுக்கு தெரியும். கிரேஸி என்றுதான் அவரை நான் அழைப்பேன்.
நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லாத நிலையிலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்றைக்கும் எனக்கு அவர் துணை நிற்பார் என்பது தெரியும்.
நயன்தாராவும் நானும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடித்து வருகிறோம். எங்களுக்குள் பல்வேறு பிரச்சினைகளை மீடியாக்கள்தான் கிளப்பிவிட்டன.
தனிப்பட்டமுறையில் எங்களுக்குள் ஒரு பிரச்சினை மட்டும் இருந்தது. ஆனால், அது பணி சம்பந்தப் பட்டதாக இருந்ததில்லை. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
எங்கள் இருவரைப் பற்றியும் தெரிந்த புரிதலுடன் கூடிய நண்பர்கள் மூலமாக எங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதன்பிறகு பிரச்சினை எதுவும் எழவில்லை.
ஆனாலும் சில காலம் நயன்தாராவுடன் பேசாமலிருந்தேன். பிறகு இருவரும் பேசிக்கொண்டோம். நானும் நயனும் போட்டியாளர்கள்தான் அதேசமயம் எங்களுக்குள் நாங்கள் வாழ்த்து சொல்லிக்கொள்வோம்.






