செப்டம்பர் மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

924

rishabam

சத்தியமே ரிஷபம் என்பதற்கேற்ப எதிலும் எப்போதும் சத்தியத்தை விரும்பி நடக்கும் ரிஷப ராசி அன்பர்களே தனஸ்தான ராசியில் செவ்வாயும் குருவும் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரனும் இருப்பதால் நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். மூன்றாம் இடத்திற்கு செவ்வாய் 3ம் திகதி மாறுவதால் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.

மாத முற்பாதியில் ஆட்சியில் இருக்கும் சுகஸ்தானாதிபதி சூரியனால் வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். தாயாருடன் இருந்து வந்த கசப்புகள் மறையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.

குருவின் பார்வையால் தடைகளை தகர்ப்பீர்கள். ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் களத்திர விரையாதிபதியால் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டி வரலாம். வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். ஒன்பதாமதிபதி சனி ஆறில் மறைந்தாலும் அவரை வியாழ பகவான் பார்ப்பதால் காரிய அனுகூலம் கிடைக்கும்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். லாபஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். பிரச்னைகளை முறியடிப்பீர்கள். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் நிலவி வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து உறவுகள் நல்ல நிலையில் இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத முற்பாதியில் சுமாராக இருந்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயிலுக்குச் சென்று அன்னையை வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 18 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : அம்மனுக்கு மல்லிகைப் பூவை சாத்தி வணங்கி வலம் வரவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 13, 14 ஆகிய திகதிகளில் பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள் :
வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.