சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சான்றிதழ்களுடன் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!!

520

saudi

சவுதி அரேபியாவின் ஒலெய்யாவிலுள்ள நலன்புரி நிலையத்தில் உயிரிழந்த பழனியாண்டி கற்பகவள்ளியின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

மஸ்கெலியா – சாமிமலை பகுதியிலிருந்து தொழிலுக்காக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த குறித்த பணிப்பெண், கடந்த 31 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

கற்பகவள்ளி உளநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்ததாக ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்களுடன் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் உப்புல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பணிப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் கருதினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் சட்டத்திற்குப் புறம்பாக சேவையில் ஈடுபட்டு, பிரச்சினைகளை எதிர்நோக்கும் பணிப்பெண்களுக்காகவே ஒலெய்யாவில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியது.

இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ள தூதரகம் தற்போது 82 இலங்கை பணிப்பெண்கள் மாத்திரமே அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.