வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் உயர்தரத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு அதிகளவான மாணவர்களை உள் வாங்குவதற்கு ஆசிரியர்களின் நெறிப்படுத்தல் காலத்தின் தேவை என வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் நேற்று 18.11.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா தெரிவித்தார் .
அவர் மேலும் வவுனியாவில் தாதியர் பயிற்சி கல்லூரி அமைக்கபட்டிருந்தும் அக்கல்லூரியில் தாதியர் பயிற்சிக்கு உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற போதுமான மாணவர்கள் வவுனியா மாவட்டத்தில் இல்லாமை மிக வேதனைக்குரிய விடயமாக உள்ளதையும் சுட்டிகாட்டினார் .
அதே போன்று கட்டிட மற்றும் நிலஅளவை போன்ற துறைகளுக்கும் போதுமான மாணவர்கள் வவுனியா மாவட்டத்தில் இல்லாமையும் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் இருந்தும் பொருத்தமான விண்ணப்பதாரிகள் இல்லாமையும் ஒரு பிரச்சினையாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.