பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் என்றும் அவரது பாட்டி நேற்று முன்தினம் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை பாபிலோனா கூறும்போது, எனது பாட்டி கொடுத்த புகார் மனு பொய்யானது, அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது கணவர் சுந்தருடன் நான் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன். 6 நாட்களுக்கு முன் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால் என்னால் நடக்க முடியவில்லை. இதனால் என்னுடைய புகார் மனுவை எனது கணவர் சுந்தர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுப்பார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று பகல் 12 மணியளவில் பாபிலோனாவின் கணவர் சுந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாபிலோனா கையெழுத்திட்ட மனு ஒன்றை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
கடந்த சில ஆண்டுகளாக எனது பாட்டி கிருஷ்ணகுமாரியோடு நான் வாழ்ந்து வந்தேன். அவர் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். இதனால் எனது பாட்டியின் கொடுமையிலிருந்து மீண்டு, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி சுந்தரை நான் திருமணம் செய்துகொண்டேன். எனது திருமண செய்தி பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வந்தன.
எனது திருமணத்தை எனது பாட்டி ஏற்கவில்லை. இதனால்தான் எனது கணவரை மந்திரவாதி என்று கூறி அவரது பிடியில் சிக்கியிருப்பதாக எனது பாட்டி தவறான புகார் மனு கொடுத்துள்ளார். எனது கணவர் மற்றும் குழந்தையுடன் நான் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன். தவறான புகார் கொடுத்த எனது பாட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற மனு விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனாவின் கணவர் சுந்தர் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
நான் உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்கின்றேன். எனது ஆலோசனையின் பேரில் எனது மனைவி பாபிலோனா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார்.
ஆனால் பாபிலோனா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது பாட்டி விரும்புகின்றார். அதனால்தான் என்னை பற்றியும், பாபிலோனா பற்றியும் தவறான புகார் கொடுத்துள்ளார். என்னிடமிருந்து பாபிலோனாவை பிரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சி பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.






