பிரேஸிலின் முன்னாள் அழகுராணியொருவர், தனது முன்னாள் கணவரினால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த முகத்துடன், தான் எதிர்கொண்ட வன்முறை குறித்து கூறும் வீடியோவொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ரெனாட்டா லுஸ்டோசா எனும் இந்த யுவதி, பிரேஸிலில் நடைபெற்ற பல்வேறு அழகுராணி போட்டிகளில் வெற்றியீட்டியவர். 2007 ஆம் ஆண்டில் மிஸ் பஹியா அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்ற அவர், 2011 ஆம் ஆண்டில் மிஸ் பியாயு அழகுராணி போட்டியிலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 27 வயதான ரெனாட்டா லுஸ்டோசா, மொடலாகவும் அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றிவந்தார். தனது அழகினால் ஏராளமானோரை கவர்ந்த ரெனாட்டா, தனது முகத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்படும் வீடியோவை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
தனது முன்னாள் கணவர் தன்னைக் கடுமையாக தாக்கி காயமேற்படுத்தியதாக அழுதுகொண்டே அவ் வீடியோவில் ரெனாட்டா கூறினார். தமது இரு வயதான மகனின் முன்னிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
அற்பமான விடயத்துக்காக நான் மீண்டும் உடல் ரீதியான வன்
முறைக்குள்ளானேன். யார் மீது தவறு என்பது முக்கியமல்ல, ஒரு பெண்ணை ஆண் ஒருவர் தாக்குவதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் எனது மகனின் முன்னிலையில் நடந்தன.
அனைத்தையும் அவன் பார்த்தான்’ என ரெனாட்டா தெரிவித்தார். ‘இந்த மாதிரியான ஓர் இராட்சதனை நான் என்ன செய்ய முடியும்? பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்தால், அவரை பொலிஸார் துரத்தி, கைது செய்வார்கள்.
ஆனால். மறுநாள் அவர் விடுதலையாகிவிடுவார். என்னை கொல்லப் போவதாக மில்லியன் கணக்கான தடவைகள் அவர் கூறியுள்ளார். அவர் இப்படி செய்யக்கூடும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நான் ஏற்கெனவே தாக்கப்பட்டு விட்டேன். இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன். நான் தாக்கப்பட்டுள்ளேன்… தாக்கப்பட்டுள்ளேன்’ என அவ் வீடியோவில் ரெனாட்டா மேலும் கூறினார் ரெனாட்டா, ஹென்றிக்.
எனினும், இவ் வீடியோவை பார்வையிட்டவர்கள், வீட்டு வன்முறைகள் தொடர்பான விசாரிக்கும் அதிகாரிகளுக்கு இத் தகவலை தெரிவித்தனர். அதன்பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்ட ரெனாட்டா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீட்டில் தான் தாக்கப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்திய ரெனாட்டாவை துணிச்சலான பெண் என ஊடகங்கள் பாராட்டியுள்ளன. ரெனாட்டாவை பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்ததுடன், தாக்குதல் தொடர்பாக பொலிஸாரிடம் அவர் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தார்.
பொலிஸ் அதிகாரியான அன்ட்ரெஸா கார்வெல்ஹோ இது தொடர்பாக கூறுகையில், ‘எமக்கு மேற்படி வீடியோ கிடைத்தவுடன், ரெனாட்டா ஏற்கெனவே முறைப்பாடு எதுவும் செய்துள்ளாரா என நாம் எமது பதிவுகளை ஆராய்ந்தோம். அவ்வாறான முறைப்பாடு எதுவும் காணப்படவில்லை.
அதன்பின் நாம் அவரை விசாரணைக்கு அழைத்தோம்’ என்றார். இதேவேளை, தான் தவறு எதுவும் செய்யவில்லை என ரெனாட்டாவின் முன்னாள் கணவரான ஹென்றிக் தெரிவித்துள்ளார். தான் நிரபராதி என்பதை ஹென்றிக் நிரூபிப்பார் என ஹென்றிக்கின் சட்டத்தரணி கூறியுள்ளார்.
ரெனாட்டா வெளியிட்ட வீடியோ:









