ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி : கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!!

425

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 4 போட்டிகளில் மூன்றை வென்றதன் மூலம் ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

1992-93-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், அதன்பிறகு விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது விராட் கோலி தலைமையிலான அணி.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, துடுப்பாட்டத்தைச் தேர்வு செய்தது. இந்திய அணியில் புவனேஸ்வர், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

போட்டி தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் ஜெயலலிதாவின் மறைவுக்காக இரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இரு அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.