1979ம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெளிவந்த இந்த படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.
இந்த படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றி மீண்டும் வெளியிடவிருக்கின்றனர். இதற்காக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் கமலஹாசன், அமீர், கே.ஆர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். விழாவில், அமீர் பேசும்போது..
இந்த விழாவுக்கு நான் உலகநாயகன் கமலஹாசனின் ரசிகனாக வந்துள்ளேன். பார்க்க சுவாரஸ்யமானது என்பதற்கு இந்த விழா ஒரு முக்கியமான உதாரணம். நான் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1977ம் ஆண்டு இறந்து விட்டார். முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்ததால் என்னுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். அதனால், அப்பாவின் மரணத்திற்கு பிறகு நான் சுதந்திரமானவன் ஆகிவிட்டேன்.
அப்படியொரு நாள் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு பார்த்த படம்தான் நினைத்தாலே இனிக்கும். நான் உலகநாயகனின் ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய சினிமாக்களைப் பார்த்துதான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
நான் பிறவிக் கலைஞன் கமல்ஹாசன் என்ற பெயரில் நற்பணி மன்றம் ஒன்றையும் தொடங்கினேன். அவரை நிறைய முறை நேரில் சென்று பார்க்க என்னுடைய நண்பர்கள் அழைத்தாலும் அவரை தூரத்தில் நின்றே ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் இருந்தது. அவருடன் சேர்ந்து பல இடங்களில் போட்டோ எடுத்திருந்தாலும் அவருடைய ரசிகனாக என் மேல் அவர் கை போட்டு எடுத்த போட்டோ இதுவரை ஒன்றுகூட என்னிடம் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த படத்தில் பாலச்சந்தர் அவர்களின் திரைக்கதை ரொம்பவும் அருமையானது. எல்லா காலகட்டத்திலும் பார்க்கக்கூடிய படம் இது. ரசிக்கக்கூடிய இசை இப்படத்தில் உள்ளது. 300 வருடங்கள் கடந்தாலும், சினிமா என்று ஒன்று இருக்கும்வரை பாலச்சந்தர் அவர்களுடைய சாதனையை யாராலும் தொடமுடியாது என்பது மறுக்கமுடியாது உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.