மது போத்தல்களில் இந்துக்கடவுள்களின் உருவப்படம் : மன்னிப்பு கேட்குமாறு கோரிக்கை!!

581

பிரேசில், சாயோ போலோவை தலைமைபீடமாக கொண்டு செயற்படும் அம்பரோ மது உற்பத்தி செய்யும் நிறுவனம் இந்துக்களின் கடவுள்களான பிள்ளையார், விஷ்ணு உருவம் பொறித்த மது போத்தல்களை அறிமுகப்படுத்தியுள்ளமையால், இந்து சமயத்தவர் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கா, நிவேடாவில் உள்ள இந்து இயக்க தலைவர் ராஜன் ஜெட், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மது போத்தல்களில் இந்து கடவுளர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளமை முறையற்ற செயல். இதனால், இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மனம் பெரிதும் புண்பட்டுள்ளது.

இந்து கடவுள்கள் கோவில்களிலும், இல்லத்திலும் இந்துக்களால் பூஜிக்கப்படுபவை. இந்நிலையில், அவற்றை இழிவுபடுத்தும் வகையில் மது போத்தல்களில் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் கடவுள்களை மது விற்பனைக்கு பயன்படுத்தி உள்ளது மரியாதை குறைவான செயல் ஆகும். உலகின் மிகப் பழமையான மதங்களில் முதன்மையானது இந்து மதம். வளமையான ஆன்மிக, யோக தத்துவங்களை தன்னுள் அடக்கியது.

இந்நிலையில், இந்து கடவுளர்களின் உருவங்களையோ, இந்து சின்னங்களையோ சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவறாக பயன்படுத்தக் கூடாது. என அந்த அறிக்கையில் ராஜன் ஜெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.