உலகின் மிகப்பெரிய யானைத் தந்த சந்தைக்கு முடிவு!!

663

இந்த ஆண்டின் இறுதியில், அனைத்து விதமான யானைத் தந்த வர்த்தகம் மற்றும் பதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.

யானைகளின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் இந்த முடிவு ஒரு “வரலாற்று ரீதியான முடிவு´´ என்றும், யானைகளின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையளிக்கும் முடிவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்காவில் நடந்த, அருகிவரும் உயிரினங்களைச் சந்தைப்படுத்தும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் (Cites)-சைட்ஸ்) கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தை அடுத்து இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய யானைத் தந்த சந்தையை சீனா கொண்டுள்ளது. உலகின் 70 சதவீத யானை தந்த வர்த்தகம் சீனாவில் நடப்பதாகவும் சில மதிப்பீடுகள் உள்ளன.

சீனாவில் ஒரு கிலோ யானைத் தந்தம் சுமார் ரூ 71,355, அதாவது 1,100 அமெரிக்க ​டொலர்கள் அல்லது 850 பிரிட்டன் பவுண்ட் மதிப்பீட்டைப் பெற முடியும். கடந்த வெள்ளியன்று சீனாவின் மாநில கவுன்சில் இந்தத் தடை குறித்த விவரங்களை அறிவித்தது.

யானைத் தந்த வணிக செயலாக்க நடவடிக்கை மற்றும் விற்பனை இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் படிப்படியாக இந்த வர்த்தகத்தில் இருந்து நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்த வர்த்தகம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய செய்தியை, உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) என்ற பாதுகாப்பு குழு வரவேற்றுள்ளது. இந்த முடிவு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு என்றும், உலகின் யானைத் தந்தத்திற்கான முதன்மை சந்தையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமிக்ஞை இது என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் யானைகள் வேட்டையாடுவதைத் தடுப்பதற்கான சர்வதேச அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் தலைமை ஏற்றுள்ள சீனாவை வனஉயிரின வர்த்தகம் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழுவின் துணை இயக்குநரான எல்லி பெப்பர் புகழ்ந்துள்ளார்.

சீனாவில் இருக்கும் யானை தந்தத்திற்கான மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையை, ஒரே அடியாக முடிவுக்கு கொண்டுவர மிகத் தீவிரமான கால அளவைக் கொண்டுவந்துள்ளது உலகளவில் குறிப்பிடத்தக்க செயலாகும், என்றார் அவர்.

இந்த முடிவு தற்போதுள்ள யானைகளை காப்பாற்றுவதற்கான முக்கியமான திருப்புமுனை,´´ என்று அவர் கூறினார்.

1989ல் யானைத் தந்தத்திற்கான சர்வதேச சந்தை மூடப்பட்டாலும், உலகின் பல நாடுகளிலும் சட்டப்பூர்வமாக உள்நாட்டுச் சந்தைகள் செயல்பட்டு வந்தன.

கிரேட் எலிபண்ட் சென்சஸ் (Great Elephant Census) என்ற யானை தொகை கணக்கெடுப்பில், கடந்த ஏழு ஆண்டுகளில் யானைகள் கொல்லப்படும் சம்பவங்கள் பெரிய எண்ணிக்கையில் உயர்ந்ததுள்ளது என்றும், இதனால், ஆப்பிரிக்காவில் யானைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது என்றும் தெரியவந்துள்ளது.

அக்டோபர் மாதம் சைட்ஸ் (Cites) தீர்மானத்திற்கு சீனா ஆதரவு அளித்ததால், யானைத் தந்த வர்த்தகத்திற்குத் தடை கொண்டுவரும் முடிவுக்கு இருக்கும் பலம், அங்குள்ள பங்கேற்பாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இன்னும் வலுவான தீர்மானத்தை சீனா விரும்பியதாக சில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.