பிரேசில் சிறையில் கைதிகளிடையே மோதல் : 33 பேர் உயிரிழப்பு!!

696

பிரேசில் நாட்டின் ரூராய்மா பகுதியில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 33 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் சிறையில் ஒரே வாரத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2 ஆம் திகதி அமேசான் மாநிலத்தில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், ரூராய்மா மாநிலத்தில் உள்ள சிறையில் வெள்ளிக்கிழமை இரு பிரிவு கைதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் கைதிகளின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

ஒரு மணி நேரம் நீடித்த மோதலில் இரு தரப்பினரும் கத்திகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறைக்காவலர்கள் கடுமையாகப் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கைதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடிப்படை வசதிகளின்றி அடைக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், இந்த மோதல் சம்பவங்கள் அரசாங்கம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.