சேரன் இயக்கும் புதிய படம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது..
இயக்குனர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது தவமாய் தவமிருந்து படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார்.
சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.
தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சினைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா.
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப்படும் என்று பாரதிராஜா பேசினார்.
விழாவில் சேரன் பேசும் போது சினிமாவில் பணத்தைவிட நண்பர்களை நிறைய சம்பாதித்து உள்ளேன். இந்த விழாவுக்கு அழைத்த உடன் எல்லோரும் வந்து விட்டார்கள். ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் சிறப்பாக வந்துள்ளது என்றார்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.