பூமியின் உள்மையப் பகுதியில் இதுவரை அறியப்படாத ஆதாரப்பொருள் ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு பூமியின் உள்மையப் பகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் தேடி வந்துள்ளனர்.
பூமியின் உள்மையப் பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும் அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப்பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
என்றாலும், உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும்.
“இன்னொரு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது சிலிக்கான் என நாங்கள் நம்புகிறோம். பூமியின் உள்மையப் பகுதியின் எடையில் சுமார் 5 சதவீதம் இது இருக்கும். இரும்பு-நிக்கல் உலோகக் கலவையில் கலந்திருக்கலாம்” என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டோக்கியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஈஜி ஒக்டானி பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.
1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் உள்மையப் பகுதி திடமான ஒரு பந்து போன்றதாகக் கருதப்படுகிறது.
பூமியின் உள்மையப் பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே, இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச்செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.
பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப் பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றை சேர்த்து பார்த்தால் 5 சதவீதம் எஞ்சியுள்ளது. அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.
பூமியின் உள்மையப் பகுதியில் நிலவுகின்ற அதே அளவு அதிக அழுத்தங்களுக்கும் தட்டவெப்ப நிலைக்கும் அதனை உட்படுத்தினர்.
பூமியின் உள்மையப் பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.
ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகளை நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறியிருக்கிறார்.
தகவல்: பிபிசி






