இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமனம்!!

596

தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் எஞ்சிய போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதனால் உப்புல் தரங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளதுடன், புதுமுக வீரர்களான சந்துன் வீரக்கொடி, லஹிரு மதுஷங்க, சதுரங்க டி சில்வா ஆகியோர் இலங்கை குழாத்திற்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

நுவன் பிரதீப், தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1-1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை சமநிலை வகிப்பதுடன் நாளைய மூன்றாவது போட்டி தொடரை தீர்மானிப்பதாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.