வவுனியாவில் உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக முச்சக்கரவண்டி சாரதிகள் மாபெரும் பேரணி!!

733

 
வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமற்போனோரின் உறவினர்களின் சாகும்வரையான உண்ணாவிரத்தினை இன்று (26.01.2017) நான்காவது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் 500ற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாக பிரதான பஜார் வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அதேநேரம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று அமைதியான முறையில் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இன்று காலை உணவு தவிர்ப்பவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கொட்டும் மழையிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் சென்று உணவுத் தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் அமைதியான முறையில் அமர்ந்திருந்து ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

உண்ணாவிரத்தில் ஈடுபடுபவர்களின் நிலை இன்று மேலும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.