விவசாயிகளுக்காக புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதில் முதலாவதாக தன்னுடைய அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய முழு ஆதரவையும் அளித்தவர் ஜி.வி.பிரகாஷ்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை அருண்ராஜா காமராஜுடன் இணைந்து உருவாக்கினார். அப்பாடலின் மூலம் வரும் வருமானம் அனைத்தையும் நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார்.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனது கவனத்தையும் விவசாயிகளின் பிரச்சினைக்கு திருப்பியுள்ளார். நலிவடைந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
அவர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க ஜி.வி.பிரகாஷ். திட்டமிட்டுள்ளார்.
தொண்டு நிறுவனத்தின் முதல் முதலீடாக தான் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார். இதற்கான பணிகளில் தற்போது ஜி.வி.பிரகாஷ் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.
தொண்டு நிறுவனம் தொடங்க பல்வேறு அரசாங்க வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் அனைத்து பணிகளும் முடிந்தவுடன் முறையாக அறிவிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.






