இந்திய, ராஜஸ்தான் மாநிலம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் பாபு லால் நகர் என்பவர் பண்ணை மற்றும் கிராமப்புற தொழில்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இவர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் தன்னை தாக்கி கற்பழித்து விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ம் திகதி மந்திரி பாபுலால் நகரை சந்திக்க சென்றேன். அப்போது என்னை ஒரு அறையில் அடைத்து துன்புறுத்தி என்னை அவர் கற்பழித்து விட்டார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னரே அப்பகுதி காவல்துறையில் புகார் தெரிவித்தபோது அவர்கள் அதை பதிவு செய்யவில்லை.
பிறகு அவர் நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதையடுத்து நீதித்துறையின் அறிவுரைப்படி மந்திரி பாபுலால் நகர் மீது கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்பு தாதி ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட இரு வழக்குகளில் அசோக் கெலாட் அரசை சேர்ந்த இருமந்திரிகள் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஒரு பொதுக்கூட்டத்தின் போது அந்த பெண்ணை சந்தித்தது உண்மை. ஆனால் இதில் அரசியல் சதி நடந்து இருக்கிறது என்று இந்த புகாரை மந்திரி பாபுலால் நகர் மறுத்து இருக்கிறார். அந்த பெண் இதுபோன்று முன்பு ஒருவரை மிரட்டி பணம் பறித்து சென்று இருக்கிறார் என்றும் மந்திரி அப்போது தெரிவித்தார்.