யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ள புதிய வாள்வெட்டு கலாசாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனைகளை வழங்குவதன் மூலமே இவற்றைக் கட்டுபடுத்த முடியும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றங்களால் வழங்கப்படும் பிணைகளானது சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இதுவரை யாழ்.மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு பிணை வழங்கக் கோரி அவர் தரப்பு சட்டத்தரணியால் யாழ்.மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தின் போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறி பிணையை நிராகரித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித் அவர், தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் கலாசாரமானது யாழ்ப்பாணத்தில் உருவெடுத்து யாழ்ப்பாணத்து இளைஞர்களை சீரழித்து வருகின்றது.
கடந்த ஒன்பது மாத காலமாக கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வாள்வெட்டு குழு மோதல் கலாசாரம் இவ்வருடத்தின் தை மாதத்தின் இறுதி பகுதியில் மீண்டும் புதியதொரு குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையானது தெற்கு அரசியல் மட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மோசமானதாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.
இந்நிலையில் இத்தகைய குற்றச் செய்லகளை கட்டுபடுத்த வேண்டுமாயின் நீதிமன்றங்கள் இக் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
பிணை கோருவது என்பது எதிரியின் உரிமையாக இருப்பினும் அவ் பிணையை வழங்குவதில் நீதிமன்றமானது சமூக அக்கறையை பிரதானமாக கருத்திலெடுத்தே பிணையை வழங்கும் என்றார்.





