சிரிய சிறைச்சாலையில் 13 000 பேர் தூக்கிலிட்டுக் கொலை செய்ய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபையின் குற்றச்சாட்டை சிரியா மறுத்துள்ளது.
சிரியா கடந்த 5 வருடங்களில் சுமார் 13,000 சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்ற சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையை சிரிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை முற்றிலுமான பொய் எனவும், இது போன்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச அரங்கில் சிரியாவுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சிரிய அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் குறித்த அறிக்கையில், சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஷாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்குமிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
சிரியாவில் கடந்த 5 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரானவர்கள் என 13,000 பேருக்கு இரகசியமாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 1000 க்கும் மேற்பட்டோர் சித்திரவதை செய்யப்பட்டு, உணவு அளிக்கப்படாமல் கொல்லப்பட்டுள்ளனர். இன்றளவும் அங்கு வாரந்தோறும் 50 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
சிரியாவைச் சேர்ந்த அரச படை வீரர்கள், நீதித்துறை வட்டாரங்களில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாக அதன் தரப்பில் கூறப்பட்டிருந்தது.






