கதிர்காம உற்சவ திகதி பிற்போடப்பட்டமையால் அதனை ஒட்டி உற்சவம் நடத்தும் முருகன் ஆலயங்கள் குழப்பத்தில் உள்ளன.
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆடிப் பௌர்ணமிக்கு 15 நாள் முன்னதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தத்துடன் முடிவடைவது வழமையாகும்.
இந்த உற்சவ காலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் கதிர்காமம் சென்று வழிபடுவார்கள். இந்த ஆண்டு ஜூலை 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 22ம் திகதி ஆடிப் பௌர்ணமி தினமன்று தீர்த்த உற்சவத்துடன் முடிவடைவதாக இந்து பஞ்சாங்க நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் ஆகஸ்ட் 21ம் திகதி ஆவணி பௌர்ணமிக்கு முதல்நாள் அன்றே தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும் என்று தற்போது ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கதிர்காம ஆலயத்தின் உற்சவ திகதியை ஒட்டியே திருவிழாக்களை நடத்தும் முருகன் ஆலயங்களின் திருவிழாக் காலங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
பஸ்நாயக்க நிலமே எனப்படும் கதிர்காம நிர்வாகத் தலைவர்களாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை என்றும் நாட்டின் இந்து கலாசார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கதிர்காம உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கிலிருந்து- கிழக்கு மாகாணம் ஊடாக மாதக் கணக்கில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள இந்து அடியார்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஊடாக தற்போது திருகோணமலை மாவட்டம் பட்டித்திடல் முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.
ஆடி மாதம் பௌர்ணமிதான் முருகனுக்குரிய ஆடிவேல் தினம். அப்படியிருந்தும் கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கவலை அளிக்கிறது என்று பாதயாத்திரை பக்தர்கள் கூறுகின்றனர்.ஆனால், உற்சவத்தை முன்னிட்டு கன்னிக்கால் நாட்டப்பட்டு 45 நாட்களின் முடிவிலேயே தீர்த்தோற்சவம் நடத்த வேண்டுமென்பதால், கன்னிக்கால் நாட்ட வேண்டிய கடந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதற்கு உகந்த நேரம் அமையவில்லை என்று கதிர்காம ஆலயத்தின் தலைமை கப்புறாளை- பூசகர் சோமபால பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
அதனாலேயே, எதிர்வரும் ஆணி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.