உயிரிழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்யப்படவிருந்த வேளையில், இறுதிக் கிரியை நடத்தும் நிறுவனமொன்றின் ஊழியர்களால் சவப்பெட்டியிலிருந்து அந் நபரின் சடலம் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்றுள்ளது.
அந் நபரின் குடும்பத்தினர் குறித்த மலர்சாலை நிறுவனத்துக்கு சுமார் 5,000 ரூபா கடன் பாக்கி செலுத்த வேண்டியிருந்தமையே இதற்கான காரணமாம்.
கடந்த சனிக்கிழமை இறுதிக்கிரியையின்போது, சவக்குழிக்குள் சடலத்தை இறக்குவதற்குத் குடும்பத்தினர் தயாரான வேளையில், இறுதிக்கிரியை ஏற்பாட்டு நிறுவன ஊழியர்கள் சவப்பெட்டியை பலவந்தமாக திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.
இதனால் இறந்த நபரின் குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்த நபரின் உறவினர்களால் தமக்கு வழங்கப்பட வேண்டிய பணம் கிடைக்கும் வரை சடலத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போவதாக உள்ளூர் ஊடகங்களிடம் மேற்படி நபர்கள் தெரிவித்தனர்.
சடலத்துக்கு ஆடை அணிவித்து தயார்படுத்தியமை முதலான வேலைகளுக்கான கட்டணத்தில் 150 கானா சேடி பணம் (சுமார் 5000 இலங்கை ரூபா) வழங்கப்பட வேண்டியுள்ளதாக மேற்படி ஊழியர்கள் கூறியதாக இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் மேற்படி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “அனுதாபம் கொண்ட சிலர் இவ் விடயத்தில் தலையிட்டு எமக்கு 100 கானா சேடி பணத்தை வழங்கினர். நாம் இப் பணத்தை ஏற்றுக்கொண்டு சடலத்தை ஒப்படைத்தோம்” என்றார்.
எமது சேவைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய பணத்தை கொடுக்காமல், இறுதிக்கிரியை முடிந்தவுடன் நழுவிச் செல்ல முயற்சிப்பவர்களை எச்சரிப்பதற்காகவே இந் நடவடிக்யை நாம் மேற்கொண்டோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






