வவுனியாவில் குளவியால் இடம்மாறிய வாக்களிப்பு நிலையம்!!

629

vavuniya

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் புதுக்குளம் சித்தி விநாயகர் திறந்த வெளியரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம். கே. பந்துல கரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு குளவி கொட்டியதில் ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, பாடசாலையின் மாடிக்கட்டிடத்தின் மேல் அமைந்திருந்த குளவி கூடானது வேகமாக அடித்த காற்றின் காரணமாக கீழே விழுந்துள்ளது.



இந் நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளான மாறம்பைக்குளம் மதினா நகர் பாடசாலையின் ஆசிரியர் ஜி. கிறிஸ்துராஜா, புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அ.லோகேஸ்வரன், அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை திருமதி சு.ரஞ்சிதமலர் ஆகியோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் வீதியால் ஓடிச் சென்றபோது காப்பாற்றுவதற்கு சென்றவர்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது.
இதன் பின்னர் கிராமத்தவர்கள் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் ஜி.கிறிஸ்துராஜா என்பவர் மரணடைந்துள்ளார்.

இந் நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோர் சென்று வாக்களிப்பு நிலையத்தினை பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதேவேளை பாடசாலை வளாகத்திற்கு உடனடியாக வருகை தந்த வவுனியா மாவட்ட மலோரியா தடை இயக்கத்தினர் குளவி கூட்டை இரசாயன மருந்து தூவி அகற்றியுள்ளனர்.

அத்துடன் இவ் வாக்களிப்பு நிலையமும் உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுக்குளம் மாகாவித்தியாலயத்தில் வாக்களிக்கவிருந்த வாக்காளர்கள் இப் பாடசாலைக்கு எதிராகவுள்ள சித்தி விநாயகர் திறந்தவெளியரங்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும்.