வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன் மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் இம்முறை தேர்தல்கள் கடமைகளில் 40,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை மரத்திலான வாக்குப்பெட்டிகளுக்குப் பதிலாக சில பகுதிகளில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. இதற்கென வெளிநாட்டிலிருந்து 250 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
நாளை 22ம் திகதி காலை 6.00 மணிக்கிடையில் சகல தேர்தல் முடிவுகளையும் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக மாகாணசபைத் தேர்தலை எதிர் கொள்கிறது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள்.
மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள். வடமாகாண சபையில் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கட்சி 2 ஆசனங்களை போனசாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கின்றது. இதனால் தேர்தல் முடிந்ததும் 38 உறுப்பினர்களுடன் வடமாகாண சபை செயற்படத் தொடங்கும்.
வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 367 வாக்காளர்கள் 6 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 420. உறுப்பினர்களின் எண்ணிக்கை 5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 52 ஆயிரத்து 409 வாக்காளர்கள் 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 589. உறுப்பினர்கள் எண்ணிக்கை 4. யாழ் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 4 இலட்சத்து 26 ஆயிரத்து 793 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலில் இரு முனைப்போட்டியே முனைப்பு பெற்றிருப்பதாக பார்ப்படுகிறது. ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது.