153 ஆவது தடவையாக பிக்பொக்கெட் அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிரித்தானிய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
40 வயதான மார்கரெட் ஜோன்சன் எனும் இப் பெண், முதியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலரிடம் பொருட்களை அபகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர். இதற்காக ஏற்கெனவே பல தடவை சிறைத்தண்டனையும் பெற்றிருந்தார்.
இதனால், “பிக்பொக்கெட் குயின் (பிக்பொக்கெட் ராணி) எனும் பட்டப்பெயரும் இவருக்குள்ளது.
கடந்த மாதம் 2 ஆம் திகதி சுப்பர் மார்கெட் ஒன்றில் வைத்து 76 வயதான பெண் ஒருவரின் கைப்பையை இவர் இரகசியமாக பறித்துச் சென்றார். ஆனால், இவரின் நடவடிக்கை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகின.
ஏற்கெனவே செய்த குற்றமொன்றுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து, சிறையிலிருந்து வெளியான 6 ஆவது நாளில் அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மார்கரெட் ஜோன்சனுக்கு நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சமூகத்தில் பலவீனமான நிலையிலுள்ள மக்களின் பொருட்களை அபகரிக்கும் “மார்கரெட் ஜோன்சனைப் பற்றி வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என பொலிஸ் சேர்ஜன்ட் ஜூலியா ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார்.






