சூதாட்டத்தில் ஈடுபட்டாரா திசார பெரேரா?

412

Thisara Perera

இலங்கை வீரர் திசார பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதனை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

கடந்த பிரிமியர் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு, இந்திய கிரிக்கெட் சபை சார்பில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே மும்பை பொலிஸார் குற்றப்பத்திரிகை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மும்பை பொலிஸார் சிக்கிய சந்திரேஷ் ஷிவ்லால் படேல் என்ற தரகர் ஐதராபாத் அணியின் நான்கு வீரர்களை புனேயில் சந்தித்து சூதாட்டம் தொடர்பாக 6 கோடி வரை பேசியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த ஜூன் 17ல் மும்பை பொலிஸார் சந்திரேஷ் ஷிவ்லால் படேல் என்ற அளித்த வாக்குமூலத்தின் விவரம்..



லீ மெரிடியன் ஹோட்டலின் ஆமிரின் நண்பர் சுனில், ஐதராபாத் அணியின் வீரர்களான இலங்கையின் திசார பெரேரா, இந்தியாவின் ஹனுமா விகாரி, கரண் சர்மா, ஆஷிஸ் ரெட்டி மற்றும் இவரது சகோதரர் பிரீதம் ரெட்டியை அறிமுகம் செய்தார்.

அப்போது பிரீதம் என்ன வேண்டும் என கேட்டார். இதற்கு நான் புனே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி, 10 ஓவரில் 60 ஓட்டங்களை தாண்டக் கூடாது. 20 ஓவரில் 140 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டாம். போட்டியில் ஐதராபாத் தோற்க வேண்டும். தவிர, பிக்சிங் செய்ய வசதியாக சில சிக்னல்கள் வேண்டும் என கேட்டேன். மறுநாள் என்னை தொடர்பு கொண்ட ஆமிர் இரண்டாவது ஓவரில் ஐதராபாத் வீரர் அவுட்டாகி சிக்னல் தருவார் என்றார்.

இதன்படி ஏப்ரல் 17ல் புனே அணிக்கு எதிரான போட்டியில் 2வது ஓவரில் ஐதராபாத் வீரர் (குயின்டன் டி காக்) அவுட்டானார். முதல் 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இதனால் தரகர்களுக்கு 3.5 கோடி ரூபா கிடைத்தது.

ஆனால் போட்டியில் தோற்பது (9 கோடி) குறித்து ஒப்பந்தம் இல்லை. கடைசியில் ஐதராபாத் அணி வெற்றிபெற இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு சந்திரேஷ் ஷிவ்லால் படேல் தெரிவித்துள்ளாக தெரிகிறது.

மும்பை பொலிஸில் சந்திரேஷ் ஷிவ்லால் படேல் தெரிவித்த நான்கு வீரர்கள் புனே (கடந்த ஏப்., 17) அணிக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், திசார பெரேரா (2 ஓட்டங்கள்), ஹனுமா விகாரி (1), கரண் சர்மா (7) ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆஷிஸ் ரெட்டி 19 ஓட்டங்கள் எடுத்தார்.

சூதாட்ட தகவல் குறித்து பிரீதம் ரெட்டி சகோதரர் ஐதராபாத் வீரர் ஆஷிஸ் ரெட்டியை தொடர்பு கொண்ட போது, எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதேபோல ஹனுமா விகாரியும் பதில் தெரிவிக்கவில்லை.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் திசார பெரேரா குறித்து வெளியான தகவல் குறித்து, இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எங்கள் வீரர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.