அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் ஊடாக வட மாகாண மக்கள் தமது ஆரம்ப வாழ்க்கையை மறந்து செயற்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கின் வசந்தத்தை பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயற்படுத்தியதாக தெரிவித்தார்.
மக்களுக்காகவே வடக்கின் வசந்தம். அரசாங்கத்திற்கோ, ஆளும் கூட்டமைப்பு கட்சிக்கோ வசந்தத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது வாக்குகளை பெறுவதற்கோ அல்ல என்று பசில் கூறுகிறார்.
ஆனால் சிலர் கேட்கிறார்கள் வடக்கின் வசந்தத்தை நடைமுறைப்படுத்தி ஏன் மக்கள் வாக்களிக்க வில்லை என்று. அது வடக்கு மக்களின் தீர்மானமாகும். அவர்களுக்கு ஆரம்பம் மறந்து போயுள்ளது என்றால், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மறந்து விட்டதென்றால் அது ஜனாதிபதியின் தவறு அல்ல.
அடிப்படைவாதம், உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், தனியாட்சி என்பனவற்றை மீள ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்த பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.