இந்தியாவில் பாடசாலைக்கு சென்ற 9 வயது சிறுவன் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செல்லபெரும் புலிமேடு கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகன் மதன் ( 9). அங்குள்ள பாடசாலையில் 4ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல நேற்று முன்தினம் காலையில் பாடசாலைக்கு சென்றான்.
மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாடசாலைக்கு புறப்பட்டான். ஆனால், அவன் பாடசாலைக்கு சென்று சேரவில்லை. நீண்ட நேரமாகியும் அவன் வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் மதன் இறந்து கிடந்தான். அவனது உடலை வெளியே எடுத்தபோது பெற்றோரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மதனின் இடது காது பிளேடால் அறுக்கப்பட்டிருந்தது. அவனுடைய உயிர் நாடியும் பிளேடால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் பிளேடால் வெட்டப்பட்டிருந்தது. பொலிசில் புகார் செய்யாமல் அவனது உடலை நேற்று முன்தினமே புதைத்து விட்டனர்.
நேற்று மதன் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவனுடைய பெற்றோர் தூசி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி மதன் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
சிறுவன் உடல் உறுப்புகளை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதால் நரபலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து தூசி பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.