சுமார் 25ற்கும் மேற்பட்ட தங்க கட்டித் துண்டுகளை விழுங்கி சென்னைக்கு புறப்படவிருந்த 6 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி 7 பேரும் ஜெட் எயார் வேய்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுவதற்காக வந்த போது நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி 7 பேர் தொடர்பாக சந்தேகம் ஏற்படவே 7 பேரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டனர்.
சுங்க அதிகாரி சரத் நோனிஸ் தலைமையிலான குழுவினர் இவர்களை மீண்டும் விமான நிலையத்துக்கு அழைத்து வந்து உணவு நீர் வழங்கி கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் ஒரு பயணி மட்டும் தனது வயிற்றிலிருந்து 4 துண்டு தங்க கட்டிகளை வெளியில் எடுத்து சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். ஏனையோர் கண்காணிப்பில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கத்தின் பெறுமதி குறித்த மதிப்பீடு இன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.