இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளை விரிவுப்படுத்த செயற்பாட்டு ரீதியான திட்டத்தை வகுப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காக லண்டனில் உள்ள பொதுநலவாய மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் வவுனியாவில் விசேட கருத்தரங்கை நடத்தி வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழுவில் அயர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
வவுனியாவில் உள்ள விடுதியொன்றில் நேற்றும் இன்றும் நடைபெறும் இந்த கருத்தரங்கில் வவுனியாவை சேர்ந்த 17 சிவில் அமைப்புகள் கலந்து கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையாளர் பிரதிபா மாநாமஹேவா தெரிவித்தார்.
மனித உரிமை செயற்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள செயற்பாடுகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பொதுநலவாய மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.