இந்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையான ரயில் பாதையில் முதல் பயணத்தின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்திய அரசின் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளதா என இந்திய அதிகாரிகள் ரயில் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர்.
திணைக்களத்திற்கு சொந்தமான ரயிலில் தமது பெட்டி ஒன்று பயன்படுத்தப்படாமையானது தமக்கு ஏற்பட்ட அவமானம் என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் முதல் பயணத்தில் முக்கியஸ்தர்கள் பயணித்ததால் குளிரூட்டப்பட்ட பெட்டியொன்றை பயன்படுத்தும் தேவை ஏற்பட்டதாகவும் திணைக்களத்திடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்காத இந்திய அதிகாரிகள் இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியை பயன்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி செல்லவிருந்த பல இந்திய அதிகாரிகள் இந்த பிரச்சினை காரணமாக ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.