சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சாதிக்க வேண்டுமானால் வீரர்களின் களத்தடுப்பும் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசன்க குருசின்ஹ தெரிவிக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக தனது ஆரம்பப் பயணம் திருப்திகரமாக அமைவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். தென் ஆபிரிக்காவில் இலங்கை அணி வாங்கிக்கட்டியபோதிலும் சொந்த மண்ணில் பங்களாதேஷை டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்டிருக்க வேண்டிய எதிர்பார்ப்பு தாராளமாக இருந்தது.
ஏனெனில் கடந்த காலங்களில் இலங்கையிடம் பங்களாதேஷ் வாங்கிக்கட்டிய அணியாகவே இருந்தது. இதற்கு முன்னர் ஏழு டெஸ்ட் தொடர்களில் பங்களாதேஷை இலங்கை தொடர்ச்சியாக வெற்றிகொண்டிருந்தது. எனினும் டெஸ்ட் தொடரில் மட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஆகிய மூன்றும் 1 – 1 என்ற சமநிலையிலேயே முடிவடைந்தது.
இதன்மூலம் பங்களாதேஷ் முதல் தடவையாக எந்தத் தோடரிலும் இலங்கையிடம் தோல்வி அடையாமல் நாடு திரும்பியமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். ‘‘இந்த முடிவுகள் எமக்கு பொருத்தமானவை அல்ல.
இந்த மூன்று தொடர்களிலும் நாங்கள் வெற்றிபெற்றிருக்கவேண்டும். சொந்த மண்ணில் விளையாடியதால் மூன்று தொடர்களையும் சமப்படுத்தினோம் என்று கூறுவது சரியல்ல. தொடர்களை வெல்வோம் என எதிர்பார்த்திருந்தோம்’’ என அசன்க குருசின்ஹ சர்வதேச இருபது 20 தொடர் முடிவில் கூறினார்.
கடைசி சர்வதேச இருபது 20 போட்டியில் 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியதால் தோல்வியைத் தழுவியதுடன் மஷ்ராபே மோட்டாஸா வெற்றியுடன் இருபது 20 போட்டியிலிருந்து விடைபெற்றார்.
‘‘கடைசிப் போட்டியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டம் ஏமாற்றம் அளிக்கின்றது. ஆடுகளத்திற்கு எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் ஏதோ ஒன்று எங்கோ பிழைத்துவிட்டது. இவற்றுக்கு பதில் கூறுவது இலகுவல்ல. இதுதான் நாட்டிலுள்ள அதி சிறந்த ஆடுகளம். முதல் ஐந்து துடுப்பாட்டக்காரர்கள் பிரகாசித்திருக்க வேண்டும். இங்கு ஓட்டங்களைப் பெறமுடியாதென்றால் அது பிரச்சினையாகத் தான் இருக்கப்போகின்றது’’ என்றார் அசன்க குருசின்ஹ.
களத்தடுப்பில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்துபவர்களே சம்பியன் கிண்ணத்திற்கான தேர்வுக்கு தகுதி உடையவர்கள் என்பதில் தானும் தெரிவுக் குழுத் தலைவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அசன்க மேலும் கூறினார். இப் போட்டிக்கான இறுதிக் குழாம் இம் மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
‘‘களத்தடுப்பு தொடர்பில் வீரர்களுக்கென சில திட்டங்களை வைத்துள்ளோம். வீரர்கள் திடகாத்திரத்துடன் இருந்தால் அவர்கள் களத்தடுப்பு, துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலவற்றிலும் சிறப்பாக செயல்படுவர்.
உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தார்கள் என்ற காரணத்திற்காக யாரையும் தெரிவு செய்வதில்லை என்ற தெளிவான தகவலை தெரிவுக் குழுத் தலைவரும் நானும் வெளியிட்டுள்ளோம்.
களத்தடுப்பில் வீரர்கள் குறிப்பிட்ட தராதரத்தை அடைவதுடன் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருப்பது அவசியம்’’ என அசன்க குருசின்ஹ மேலும் தெரிவித்தார்.






