பெற்ற தாயின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மகன்!!

506

பெற்ற தாயின் தலையைத் துண்டித்து காளி கோவிலுக்கு நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள புருலியா மாவட்டம், பாமாகிராம் பகுதியைச் சேர்ந்தவர் புலி மஹாட்டோ (55). இவரது இளைய மகன் நாராயணன் மஹாட்டோ (35).

கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயாரை நாராயணன் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் காளி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். சாமியை தரிசித்து விட்டு அங்கு கிடந்த ஆடு-, மாடுகளை வெட்டப் பயன்படுத்தும் நீண்ட வாளை எடுத்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அந்த வாளால் அவரது தாயாரின் தலையை ஓங்கி வெட்டியுள்ளார். பல அடி தூரத்தில் தள்ளி விழுந்த தாயாரின் தலையைக் கண்டு பதற்றப்படாத நாராயணன் நேராக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்த தனது அண்ணனிடம் ’நமது அம்மா காளி கோயிலில் இருந்த வாளை எடுத்து,தலையை வெட்டிக் கொண்டார்’ என தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த நிலையில் ஓடிச் சென்று பார்த்து சந்தேகமடைந்த புலி மஹாட்டோவின் மூத்த மகன் இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாராயணனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், பெற்ற தாய் என்றும் பாராமல் புலி மஹாட்டோவின் தலையை வெட்டி அவர் நரபலி கொடுத்த உண்மை தெரிய வந்தது.

உனது குடும்பம் நல்ல வளமான நிலைக்கு உயர வேண்டுமென்றால், உன் தாயாரை நீ எனக்கு நரபலி கொடுக்க வேண்டுமென தனது கனவில் வந்த காளி தேவி சொன்னதாகவும், காளியின் கட்டளைப்படி புலி மஹாட்டோவை நரபலி கொடுத்ததாகவும், பொலிஸாரிடம் நாராயணன் மஹாட்டோ வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.