போதைக்கு அடிமையான மலைப்பாம்புக்கு மறுவாழ்வு!!

514

அவுஸ்திரேலிய ஆய்வகம் ஒன்றில் கடந்த வருடம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட, போதைக்கு அடிமையான மலைப்பாம்பு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை தமது பாதுகாப்புக்காக வைத்திருப்பது வழக்கமாகிவிட்டது. அதன்படி, ஆறடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பை, கடந்த வருடம் ஆய்வகம் ஒன்றில் அதிகாரிகள் கைப்பற்றினர். பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டுவந்த அந்தப் பாம்பிடம் போதைக்கு அடிமையானதன் அறிகுறிகள் தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அதிகாரிகள், அப்பாம்புக்கு மறுவாழ்வளிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக, பதினான்கு சிறைக் கைதிகளைத் தெரிவுசெய்து அவர்கள் மூலம் இந்தப் பாம்பு பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக ‘மறுவாழ்வு’ பெற்று வந்த மலைப்பாம்பு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த ஒருவர், குறித்த பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்பினார். இதையடுத்து, அதற்கான நீதிமன்ற அனுமதிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், பாம்பு விடுதலை செய்யப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில், விலங்குகளுக்கு மறுவாழ்வளிப்பதற்காக கைதிகளைப் பயன்படுத்தும் திட்டம் கடந்த இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விலங்குகளுடன் பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும் நடந்துகொள்வது கைதிகள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், இதன்மூலம் கைதிகள் திருந்தி பொதுவாழ்வில் இலகுவாகக் கலந்துகொள்ள முடிகிறது என்றும் நம்பப்படுகிறது.