ரஷித்கானிடம் ஏதோ ஒன்று உள்ளது கவனத்தில் கொள்ளச் சொல்கிறார் முத்தையா முரளிதரன்!!

447

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.பி.எல். தொடர் 2017 விறுவிறுப்படைந்துள்ளது. நடப்பு சம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதான லெக்ஸ்பின்னர் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். இவரை அந்த அணி 4 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்தது.

அவர் 4 கோடி ரூபாவுக்கு தகுதியானவரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தனது லெக்ஸ்பின் மற்றும் கூக்ளி பந்தால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை கலங்கடித்துவிட்டார்.

இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சிறப்பாக பந்து வீசும் அவரை ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் வெகுவாக பாராட்டியுள்ளார். ரஷித் கான் குறித்து முரளிதரன் கூறுகையில்,

‘‘நான் ரஷித்கானை இரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நாங்கள் அவரைத் தேர்வு செய்தோம். ஏனென்றால் அவரது ஆட்டத்தை சர்வதேச போட்டியில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். அவரிடம் ஏதோ ஒரு சிறப்புத் திறமை உள்ளது. மற்ற லெக்ஸ்பின்னர்களை விட சற்று மாறுபடுகிறார். வழக்கமான பந்து வீச்சாளரை விட பந்தை சற்று வேகமாக வீசுகிறார்.

அதுபோல் சில மாறுபட்ட அளவுகளில் பந்து வீசும் திறமையும் அவரிடம் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசினார். இது எங்கள் அணிக்கு சிறந்ததாக அமைந்தது.

அவர் சிறப்பாக செயற்படுவார் என்று நினைத்தோம். எங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டார்” என்றார்.