தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுமி பத்துமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த ஆரணி அருகேயுள்ள புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தேவி. எல்.கே.ஜி. படித்து வரும் தேவி, சங்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த நிலத்தில் இருந்த 300 அடி ஆழமும் 1 அடி விட்டமும் உள்ள ஆழ்துளை கிணற்றை வைக்கோல் மற்றும் செடிகளை போட்டு தார் பாயால் மூடி வைத்திருந்தனர்.
ஆழ்துளைக் கிணறு இருப்பதை அறியாத தேவி அதன் மீது உட்கார்ந்து உள்ளார். அப்போது அச்சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாட்டிக் கொண்டாள்.
தேவியை, மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டார்.
30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி தேவி தனது பெற்றோரின் குரல்களுக்கு பதில் அளித்தாள். மேலும், ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஒட்சிசன் செலுத்தப்பட்டது.
குழாயின் அருகில் மேலும் ஒரு குழி தோண்டி சிறுமி தேவியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 25 அடி பள்ளம் தோண்டப்பட்டது.
குழந்தைக்கு தொடர்ந்து ஒட்சிசன் அளிக்கப்பட்டு வந்தது. 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்த தகவலறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்ச் முக்கூர் சுப்பிரமணியம் மற்றும் ஆரணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு, மேலும் துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே ஆழ்துளை கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.