தமிழ்நாட்டில் காதலனை கைகழுவி விட்டு காதலுக்கு தூது சென்ற விவசாயியை ஆசிரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுரேஷ்(28). விவசாயி. அதே ஊரைச்சேர்ந்த வீரப்பன் மகள் ஜெயலட்சுமி(25).
இருவரும் 2004ம் ஆண்டு காதலித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அருகில் உள்ள பன்னாள் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(25). அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இவர் தஞ்சை கல்லூரியில் படிக்கும் போது ஒரு வாலிபரை காதலித்தார். இருவரையும் சேர்த்து வைக்கும்படி தனது உறவுக்காரரான சுரேஷிடம் கூறியுள்ளார். அவருக்கு உதவ சென்ற சுரேசுக்கும் சித்தி முறையுள்ள ரேவதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 18ம் திகதி தனது மனைவி ஜெயலட்சுமியிடம் ரேவதியை காதலனுடன் சேர்த்து வைக்க செல்வதாக கூறி சுரேஷ் சென்றுள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு சுரேஷ் கோவையில் இருந்து மனைவி ஜெயலட்சுமிக்கு போன் செய்து, நான் ரேவதியை திருமணம் செய்துகொண்டதாக கூறி மொபைலை நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் ஜெயலட்சுமியும் மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.