தனிமையில் இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை: யாழில் சம்பவம்..

516

தனிமையில் வீட்டிலிருந்த வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்த 20 பவுண் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது வல்வெட்டித்துறை, ஊரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சோதிலிங்கம் தெய்வமலர் (வயது 69) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், நேற்று அதிகாலை இவரது மகள் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார். இதன்போது குறித்த மூதாட்டி தனிமையில் இருந்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மூதாட்டியைக் கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளை இட்டுச் சென்றுள்ளனர்.



சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இக் கொலை சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்டவில்லை எனவும் குறித்த வயோதிபப் பெண்ணின் மகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.