முன்விரோதம் காரணமாக 32 வயது நபரை நடுவீதியில் குத்திக் கொன்ற 16 வயது சிறுவன்!!

441

Blood_StainedKnife

சென்னையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் 16 வயது சிறுவனால் வீதியில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. குற்றவாளியான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த வினோத் (32), பாண்டிபஜாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சீட்டு விளையாட்டில் கிடைத்த 30 ஆயிரத்தைக் கொண்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் வினோத். பின்னர் ஆயிரம்விளக்கு அண்ணாசாலை-பத்தாரி சாலை சந்திப்பில், நண்பர்களுடன் போதை உற்சாகத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த வினோத்தையும் அவரது நண்பர் தபேலா பாஸ் என்பவரையும் கிண்டல் செய்துள்ளான் 16வயது சிறுவன் ஒருவன்.

இதனையடுத்து வினோத்துக்கும் அச்சிறுவனுக்குமிடையே மோதல் உண்டாகியுள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன். வினோத் குடிவெறியில் இருந்ததால் இத்தாக்குதலை அவரால் தடுக்க இயலாமல் போய்விட்டது.

உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப் பட்ட வினோத் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வினோத்தை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பதும் ஏற்கனவே அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் வினோத்துக்கும், அச்சிறுவனுக்கும் தகராறு உண்டானதும் தெரிய வந்தது.

மேலும் அப்போது உண்டான மோதலில் வினோத் அச்சிறுவனை அடித்ததாகவும் அவனது தாயாரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த விரோதத்தை மனதில் வைத்தே வினோத்தை கத்தியால் குத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.