யாழ். ஆலயத்தில் ஒருகோடி பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!(படங்கள்)

520

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி என்பன நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு குறித்த ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர்.

பின்னர் ஆலய களஞ்சியசாலை கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட் என்பவற்றையும் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்து அதற்குள்ளிருந்த 150 பவுண் வரையான நகைகளைத் திருடியுள்ளனர்.

குறித்த பெட்டகத்திற்கு எட்டு பூட்டுக்கள் போடப்பட்டிருந்தது. அத்தனை பூட்டுக்களையும் உடைத்தே நகைகளைத் திருடியுள்ளனர். திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு சாத்துகின்ற அத்தனை நகைகளும் திருடப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயணப் பெருமானுக்கு சாத்தப்பட்டிருந்த மூன்று வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. மேலும் ஆலயத்திலிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

திருடர்கள் மிக நீண்ட நேரம் ஆலயத்திற்குள் தங்கி நின்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதேவேளை மாமிசம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கொத்துறொட்டிப் பார்சல் ஒன்று பையில் இருந்து பிரிக்கப்படாத நிலையில் ஆலயத்தினுள் காணப்படுகின்றது.

மேலும் திருடர்கள் புகைப்பிடித்து பின்னர் எறிந்த பீடியின் அடிப் பகுதிகள் எழுந்தருளி மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களில் காணப்படுகின்றன. ஆலயத்தின் உள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணி மணிக்கோபுரத்தினுள் வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் நகைகளைத் திருடிய பின்னர் திருடர்கள் மணிக்கோபுர வழியாக ஏறித் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று காலை வழமையான பூசைக்காக ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர் ஆலயத்தின் உள் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றமையையும் நகைகள் திருடப்பட்டிருக்கின்றமையும் கண்டு ஆலய பரிபாலன சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

ஆலயத்திற்கு வந்த பொலிஸார் ஆலயத்திற்குள் எவரும் செல்லவேண்டாமென்று தெரிவித்ததோடு தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதேபோன்றதொரு பாரிய திருட்டு இடம்பெற்றது.

இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

1 4 2 3