வவுனியாவில் தற்கொலை செய்த மாணவனின் தந்தையின் கதறல் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

1433

யுத்தகாலத்தில் பதுங்குகுழியில் வைத்து காப்பாற்றிய எனது மகனை அநியாயமாக பலி கொடுத்துவிட்டேன் என வவுனியாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளத்தில் (31.05.2017) அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் (17) இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் இன்று (02.06) நடைபெற்றது. இறந்த மாணவனின் தந்தையான எஸ்.தர்மராசா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த எனது மகனை பல மாணவர்கள் பார்த்திருக்க அவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அடித்ததால் மனமுடைந்த எனது மகன் கிருமிநாசினையை அருந்தி உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் சிரமதானம் செய்துகொண்டிருந்தபோது எனது மகனுக்கும் இன்னொரு மாணவனுக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகவே ஆசிரியர் எனது மகனை மாத்திரம் குறிவைத்து தாக்கியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்றைய தினம் வீட்டுக்கு வந்த எனது மகன் எவருடனும் கதைக்கவில்லை சாப்பிட்டு விட்டு பாடசாலை உடையை கழுவுவதற்கு சென்ற வேளையில் பாடசாலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்த காரணத்தினால் தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த கிருமி நாசினியை தேடி எடுத்து அருந்தியுள்ளார்.

காலையில் 9 மணிக்கு பாடசாலையில் நடைபெற்ற சம்பவம் எனது மகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எங்கள் கிராமமான கனகராயன் குளத்தைச்சேர்ந்த மக்கள் இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்திருந்தோம். யுத்ததம் நடைபெற்ற காலங்களில் பதுங்குகுழிகளில் வைத்து காப்பாற்றி கொண்டு வந்த எனது மகனை அநியாயமாக பலிகொடுத்துவிட்டேன். இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் கூலி வேலைசெய்யும் ஏழை விவசாயிகள். எனது மகனுக்கு நடந்த சோகம் இன்னொரு மாணவனுக்கு ஏற்படக் கூடாது. எமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புபுகிறோம். இன்று ஆசிரியர்களே எமது குழந்தைகளுக்கு எமனாக மறியுள்ளனர். எனது மகனின் மரணத்தை பாடசாலை சமூகம் மறைப்பதாலோ அல்லது நீர்த்துபோகச் செய்வதாலோ மாணவ சமூகத்துக்கு நீதி கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.