கூடவே இரு என்று சொல்கின்ற அம்மாவின் பேச்சைக் கேட்க ஆசைதான் : திருநங்கை சாரா உருக்கம்!!

560

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் அங்குள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கேரள மாநிலத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாரா.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் கேரளாவின் முதல் திருநங்கையாக அறியப்படும் சாரா இது குறித்து கூறுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இடத்திற்கு வர நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். நான், அக்கா, அம்மா, தந்தை என அளவான குடும்பம். என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து, கல்யாண வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறார்.

நான் என் வீட்டைவிட்டு பிரிந்து வந்து பல ஆண்டுகள் ஆகிறது. காரணம், அக்காவைக் கல்யாணம் செய்துகொடுத்த வீட்டில் என்னைக் கண்டாலே பிடிக்காது.

இவன் ஏன் இப்படி நடக்கிறான். இவன் ஏன் இப்படிப் பேசுகிறான் என்றெல்லாம் பேசிப் பேசி சங்கடப்படுத்தினார்கள். என் அக்காவுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருப்பதால், யாருக்கும் சங்கடம் வேண்டாம் என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.

வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் தங்கும் வசதி செய்துகொடுப்பார்கள். இப்போதுகூட எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த விடுதியில்தான் இருக்கிறேன். அம்மா நினைவு வரும்போதெல்லாம் போன் செய்து பேசுவேன்.

வாரம் ஒருமுறை நேரில் சென்று பார்ப்பேன். நீ எங்ககூடவே இரு என்பார்கள். எனக்கு யாரையும் கஷ்டப்படுத்த விருப்பமில்லை.

கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் வந்துவிடுகிறேன் என்று சமாளித்துவிடுவேன். அவர்களாலும் என்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை.

என்ன செய்வது இங்கிருக்கும் சமூக கட்டமைப்பு எங்களைக் கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறதே என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் எனக்கு ஒரு துணை வேண்டும். தற்போது, நான் நல்ல வேலையில் இருக்கிறேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இதுவரை நான் யாரையும் காதலித்தது இல்லை. இனி அப்படி நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், எனக்கான ஒருவர் இந்த உலகத்தில் இருப்பார்.

அவரை நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் என்று நிச்சமாக கூறியுள்ளார்.