மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சிரஞ்சீவி!!

436

siranjeevi

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நடிகர் சிரஞ்சீவி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு மற்றும் ரயில்துறை இணை அமைச்சர் சூர்ய பிரகாஷ் ரெட்டி, ஜவுளித்துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பல்லம் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதமரை சந்தித்து ராஜினாமா செய்யும் முடிவை தெரிவித்துள்ளேன். ஆனால்,அவசரம் காட்ட வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறினார் என்றார்.



ஆந்திர அமைச்சர்கள் லதா சீனிவாசன், கண்டா சீனிவாசன், சாம்பசிவராவ் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்ததோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் அருண்குமார், சாய் பிரதாப், அனந்த வெங்கடராம்ரெட்டி ஆகியோரு ராஜினாமா செய்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, ஆந்திர மாநில பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பொதுமக்கள் சாலைகளில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த அரசியல் கட்சியும் மாநில பிரிவினையை ஆதரிக்கவில்லை. ஆளும் கட்சியே இதற்கு காரணம் என்றார்.

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வரவேற்றுள்ளார்.