பங்களாதேஷ் அணி அபார வெற்றி : தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறிய நியூசிலாந்து!!

500

 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியான வங்கதேசம், நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் மினி உலகக் கிண்ணம் என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன் படி நியூசிலாந்து அணிக்கு நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், கப்டில் 33 ஓட்டங்களுக்கும், ரோஞ்சி 16 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணியின் தலைவர் வில்லியம்ஸ் மற்றொரு சீனியர் வீரரான டெய்லருடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

69 ஓட்டங்களுக்கு 2-விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி ,மூன்றாவது விக்கெட்டை 152 ஓட்டங்கள் எடுத்த போது இழந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வில்லியம்ஸ் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் வெளியேறியவுடன் அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய டெயல்ரும் அரைசதம் கடந்து 63 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பெளலியன் திரும்பினார்.

அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே ஆட்டம் கண்டது. தமிம் இக்பால் டக் அவுட் ஆனார். சௌமியா சர்கார் 3, சபீர் ரஹ்மான் 8 முசபிர் ரஹிம் 14 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இதையடுத்து களமிறங்கிய சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் முகமதுல்லா ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்தனர். அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கவிட்டனர்.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி தோற்றுவிடும் என்று கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியின் ஓட்ட விகிதம் எகிறியது.

இருவரும் அரை சதம் கடந்தனர். இவர்களை பிரிக்க நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்ஸ் பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார்

ஆனால் அவர்கள் இருவரும் பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்த சதம் கண்டனர். சகிப் அல் ஹசன் சதம் கடந்து 114 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இருந்த போதும் முஹ்மதுல்லா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தார்.

இறுதியாக வங்கதேச அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து, 268 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.