பாகிஸ்தானுக்கு எதிராக கார்டிவ், சொபியா கார்டன்ஸ் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியை இலங்கை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக மெட்ரோ ஸ்போர்ட்ஸுக்கு அணி முகாமையாளர் அசன்க குருசின்ஹ தெரிவித்தார்.
வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், காலையில் (இன்று) ஆடுகளத்தின் தன்மையை அவதானித்த பின்னர் இறுதி பதினொருவரைத் தெரிவு செய்வதாகவும் கூறினார்.
திசர பெரேராவின் தலையில் பந்துபட்டதால் அவருக்கு பாதிப்பு இல்லை என்றார் அவர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஈட்டிய வெற்றியானது இலங்கை அணிக்கு உற்சாகத்தையும் மனோதைரியத்தையும் கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அசன்க குருசின்ஹ, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு வீரர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சாமர கப்புகெதரவுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபார அரைச் சதம் குவித்த தனுஷ்க குணதிலக்க இன்றைய போட்டியிலும் நிரோஷன் திக்வெல்லவுடன் ஆரம்ப வீரராக விளையாடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
குசல் மெண்டிஸ் வழமைபோல் மூன்றாம் இலக்கத்திலும், தினேஷ் சந்திமால் பெரும்பாலும் நான்காம் இலக்கத்திலும் துடுப்பெடுத்தாடுவர்.
தொடர்ந்து அணித் தலைவர் எஞ்சலோ மத்யூஸ், அசேல குணரட்ன, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக குழாமுக்கு இரண்டாவது மாற்று வீரராக அழைக்கப்பட்ட தனஞ்செய டி சில்வா, திசர பெரேரா ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் இடம்பெறுவர்.
வேகப் பந்துவீச்சில் லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவன் பிரதீப் அல்லது நுவன் குலசேகர இடம்பெறவாய்ப்புள்ளது.
ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து சில வேளைகளில் லக்ஷான் சந்தகன் அணிக்கு அழைக்கப்படலாம்.
இந்தப் போட்டியைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தானுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமைவதால் அவ்வணியும் விடாமுயற்சியுடன் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.






