பிரபஞ்ச அழகிப் போட்டியில் சாதித்த சிறுமி!!

609

 
லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாலயா நந்தா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிரசன்னா குமார் நந்தா, சுபசுதா பிரியதர்ஷினி தம்பதியின் மகள் பத்மாலயா நந்தா (12). இவர் கட்டாக்கில் உள்ள ஸ்டூவர்ட் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிகளைப் போல சிறுமிகளுக்கென உலகளவில் லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் பதுமி நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பத்மாலயா நந்தா கலந்துகொண்டார். மேலும் இந்த போட்டியில் கலந்துகொண்ட முதல் ஒடிசா சிறுமியும் இவர்தான்.

இந்தப் போட்டிக்கான முதல் சுற்று ஆன்லைனில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில், 75 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் இறுதியாக தெரிவு செய்யப்பட்டு போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இந்தப் போட்டிக்கு நடுவர்களே கிடையாது. பார்வையாளர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுப் போட்டு வெற்றியாளர்களை தெரிவு செய்தனர்.

இந்த அடிப்படையில் பத்மலாயா நந்தா மிஸ் யுனிவர்ஸ் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தங்கக்கிரீடம் சூடப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறும்வரை அந்தக் கிரீடத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் போட்டியை அடுத்து கிரீஸ் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெறும் குட்டி உலக அழகிப் போட்டியில் பத்மாலயா நந்தா கலந்துகொள்ள இருக்கிறார்.