இலங்கை வீராங்கனை 178 ஓட்டங்கள் குவித்து சாதனை!!

560

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று நடந்த ஒரு லீக் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன், இலங்கை அணி மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ஒற்றை இலக்கில் நடையை கட்ட, 2வது விக்கெட்டுக்கு இறங்கிய சமாரி அட்டப்பட்டு வியப்பூட்டும் வகையில் மட்டையை சுழட்டி அசத்தினார்.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் இன்னொரு புறம் தனிநபராக நிலைத்து நின்று ஓட்ட மழை பொழிந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 257 ஓட்டங்கள் சேர்த்தது. சமாரி அட்டப்பட்டு 178 ஓட்டங்கள் (143 பந்து, 22 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3-வது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முதல் இரு இடங்களில் அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் (229 ஓட்டங்கள், டென்மார்க்குக்கு எதிராக), இந்தியாவின் தீப்தி ஷர்மா (188 ஓட்டங்கள், அயர்லாந்துக்கு எதிராக) உள்ளனர். சமாரிக்கு இது 3-வது சதமாகும். இலங்கை வீராங்கனைகளில் சதம் அடித்த ஒரே நபர் இவர் தான். பவுண்டரி, சிக்சராக மட்டும் 124 ஓட்டங்கள் திரட்டினார்.

ஒரு இன்னிங்சில் இந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் இவர் தான். மேலும் அணியின் ஸ்கோரில் இவரது பங்களிப்பு 69.26 சதவீதமாகும். முழுமை பெற்ற ஒரு இன்னிங்சில் அணியின் மொத்த ஓட்டங்களில் அதிக பங்களிப்பை அளித்தவர் என்ற பெருமையையும் 27 வயதான சமாரி பெற்றார். ஆனால் அவரது செஞ்சுரிக்கு பலன் கிட்டவில்லை.

தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியா 43.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 262 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. தலைவர் மெக் லேனிங் 152 ஓட்டங்களும் (135 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிகோல் பால்டன் 60 ஓட்டங்களும் விளாசினர்.